முதல் மாணவி
முதல் மாணவி
அந்த பள்ளியின் ஆண்டுவிழா
சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆடல் பாடல் மற்றும் பல்வேறு திறமைகளை மாணவர்கள் ஒரு கலைவிழாவாக நடத்திக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள்
கலைவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிக்கொண்டிருந்தார்கள். பெற்றோர்களும் இதர மாணவர்களும்
ஆண்டு விழாவைப் பார்த்து வெகுவாக பாராட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுதுதான்
பள்ளியின் முதல்வர் மாணவி நந்தினியை மேடைக்கு வருமாறு அன்போடு அழைத்தார். “வினாடி
வினா போட்டியிலும் யோகாப் போட்டியிலும் நமது பள்ளி மாணவி நந்தினி முதலிடத்தைப்
பெற்றுள்ளார். அவர்களுக்கு நமது பள்ளியின் சார்பாக முதல் பரிசு வழங்கப்படுகிறது”
என்று அறிவித்தார். மேடைக்கு வந்த நந்தினிக்கு பரிசை வழங்கி பாராட்டுத்
தெரிவித்தார் முதல்வர்.
சரி! “நீ எப்படி
முதல் இடத்திற்கு வந்தாய் என்பதை நமது பள்ளியின் மாணவர்களுக்கும்
பெற்றோர்களுக்கும் உனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்” என்றார் முதல்வர்.
அனைவரது கவனமும்
மாணவி நந்தினியை நோக்கியே இருந்தது. பள்ளியின் முதல்வரை வணங்கிவிட்டு நந்தினி
பேசத் தொடங்கினாள்.
நான் இந்த
வெற்றியைப் பெறுவதற்கு பள்ளியின் முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்களே
காரணமாகும். நான் வினாடி வினா போட்டியில் முதலாவதாக வரக் காரணம் நமது பள்ளியின்
நூலகம்தான் என்றால் அது மிகையில்லை.
அந்த நூலகத்தைப்
பற்றி நான் கொஞ்சம் பேசியாக வேண்டும்.
இந்த நூலகத்தில் நாங்கள் உறுப்பினராக சேர
வேண்டும் என்ற அவசியமில்லை. புத்தகங்கள் கிழிந்து விடும் என்று யாரும் எங்களை
அதட்டுவதில்லை. நாங்கள் புத்தகங்களை எளிதாக எடுக்கும் வகையில் அலமாரியின் உயரம்
குறைவாக இருக்கும். நாங்கள் எடுக்கும் புத்தகங்களை எப்படி வேண்டுமானாலும் அடுக்கி
வைக்கலாம். எந்த கட்டுபாடும் எங்களுக்கு கிடையாது. இந்த சுதந்திரத்தை எங்கள்
பள்ளியின் முதலவர் வழங்கியதாலேயே நாங்கள் நூலகத்தை பயமில்லாமல் பயன்படுத்த
முடிந்தது. அதற்காக முதலில் எங்கள் முதல்வருக்கு மீண்டும் நான் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்! என்று பேசிய மாணவி பள்ளியின் முதல்வரைப் பார்த்தார்.
அவர்
மிகுந்த மகிழ்ந்த நிலையில் இருந்தார். உடனே மாணவியை மேலும் பேசுமாறு கையால் சைகை
செய்தார்.
மாணவி நந்தினி
மீண்டும் பேசத் தொடங்கினாள்.
இந்த வினாடி
வினா போட்டியில் நாங்கள் தைரியமாக பங்கேற்று வெற்றி பெற முதல் காரணம் எங்கள்
பள்ளியின் முதல்வர்தான். முதலில் சிறு சிறு கதைகளைச் சொல்லி எங்கள் ஆர்வத்தை
தூண்டினார். பல்வேறு அறிஞர்கள்
குழந்தைகளாக இருந்த போது எப்படி இருந்தனர், பின்னர் எப்படி தலைவர்களாக விஞ்ஞானிகளாக மாறினார்கள் என்பதை அழகாக
எடுத்துச் சொல்வார்.அது எங்களை புதிய உலகத்திற்கு இட்டுச் சென்றது.மேலும் அந்த
அறிஞர்களைத் தாண்டி அவர்கள் சாதித்த சாதனைகளில் ஆர்வம் சென்றது. இப்படியாக
எங்களுக்கும் நூலகத்திற்குமான உறவு விரிந்து கொண்டே சென்றது.
இதற்கெல்லாம்
மேலாக எங்கள் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எல்லாம் நாங்கள் எடுத்து எளிதாக
படிக்கும் வகையில் சிறியவை. அத்தனை புத்தகங்களும் வண்ணமயமானவை. கண்ணைக் கவரும்
வண்ணப் படங்கள் எங்களுக்கு முதலில் மகிழ்வை தந்தன. எல்லா புத்தகங்களையும் ஒரு
முறைக்கு பல முறைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் ஒவ்வொருநாளும் அதிகரித்துக்
கொண்டே இருந்தது.
எங்கள் ஆசிரியர்களும்
ஏதாவது கேள்வி கேட்டு அதற்கு இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களில் தேடி விடைகாண
தூண்டுவார். இதற்கான விடையைத் தேடும்போது கட்டாயம் நாங்கள் பல புத்தகங்களைப்
பிரித்து பார்த்தே ஆக வேண்டும். அறிவியல் செய்திகள், நாட்டு நடப்புகள் கொண்ட அந்த சிறு சிறு
புத்தகங்களின் வண்ணப் படங்களைப் பார்த்தே எங்களால் பதில் சொல்ல முடியும்.
அதாவது குடிநீரை
கொதிக்க வைத்து குடித்தால் நல்லது என்று அனைவரும் சொல்வார்கள். இது மட்டும்
அறிவல்ல! மிக முக்கியமாக எந்த பாக்டீரியா? அதன் பெயரென்ன என்று நாங்கள் தேட வேண்டும். நாங்கள் விடைகளைத் தேடுவோம். ஆனால்
யார் விரைவாக விடைகளைத் தேடுகிறார்களோ அவர்களுக்கே மதிப்பெண் வழங்கப்படும். இதன்
மூலம் விரைவாகப் பதிலைத் தேடவும் அதே நேரத்தில் “யு-கோலி” என்ற பாக்டீரியாதான்
நமது குடிநீரில் பரவி பல்வேறு வயிற்று உபாதைகளை உருவாக்குகிறது என்ற செய்தியை
நாங்கள் தெரிந்து கொள்வதோடு, அதை எங்கள் வீட்டில் சொல்லி
புரிய வைப்போம்.
எனது பெற்றோர்களும் அதை
கடைபிடிக்க ஆரம்பித்து எங்களைப் பாராட்டத் தொடங்கி விட்டனர். இப்படி பெற்றோர்களின்
உற்சாகமும் எங்களோடு சேர்ந்து கொண்டதே எங்களைத் தொடர்ந்து படிக்கத் தூண்டியது
என்று மாணவி நந்தினி பேச பேச அனைவரும் அந்த பெண்ணை ஆச்சரியமாக பார்த்தனர்.
நந்தினி
நிதானமாக தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிது தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்
படுத்திக்கொண்டாள். இன்னும் அவள் பேசமாட்டாளா! என்று அனைவரும் ஆவலோடு அமைதியாக
அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சரி! நான் யோகா
வகுப்பிற்கு எப்படி போக ஆரம்பித்தேன் தெரியுமா? என்றபடி மீண்டும் பேசத்தொடங்கினாள் நந்தினி.
ஒருநாள் எங்கள்
பள்ளிக்கு ஒரு சிறிய லாரி வந்து நின்றது.அதில்
பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் எல்லாம் நிறைய இருந்தன. அதை லாரியில் இருந்து இறக்கி
வைக்க ஆள் இல்லாமல் நின்று கொண்டிருந்தது. இதை கவனித்த எங்கள் கணித ஆசிரியர், சில மாணவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு அவரே அதை லாரியில் இருந்து
இறக்கி அழகாக அடுக்கி வைத்தார். மற்ற ஆசிரியர்கள் இதை வெறுமனே வேடிக்கைப் பார்த்தனர்.
கணக்கு ஆசிரியர் வேர்வையை துடைத்தபடி எதற்கும் கவலைப்படாமல் தனது வேலையை சிறப்பாக
செய்து முடித்தார். எனக்கு இந்த நிகழ்வு பெரும் ஆச்சரியமாக இருந்தது.
நான் பள்ளி
நேரம் முடிந்ததும் கணக்கு ஆசிரியரைச் சந்தித்தேன். “எப்படி சார் உங்களால இப்படி
முடியுது! பாடமும் நன்றாக நடத்துறிங்க, இப்படி கடினமான வேலையையும் சுலபமாக செய்யரிங்க” என்று கேட்டேன். உடனே!
அவர் மகிழ்ந்து நீயாவது கேட்டியே! என்று என்னை பாராட்டினார்.
நாம் அறிவால்
மட்டும் பலமாக இருந்தா போதுமா! கூடவே நமது உடலையும் பலமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நான் யோகா மற்றும் பல உடற்பயிற்சிகளையும் கற்று தேர்ந்து பயிற்சி செய்கிறேன். அதோடு
மட்டுமல்ல தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துவிட்டுத்தான் நான் தூங்கவே
செல்வேன் என்று கணித ஆசிரியர் அன்பாக எடுத்துச் சொன்னார். இதுவும் எனது மனதில்
ஆழமாக பதிந்து போயிற்று. நம்மாளும் இது முடியுமென்று முயற்சி செய்தேன்.
அதோடு
மட்டுமல்ல! எனது தந்தை ஒரு வீடு கட்டும் தொழிலாளி. அவர் ஒவ்வொரு நாளும் அவர்
சம்பாதித்த பணத்தை எந்த செலவும் செய்யாமல் எனது அம்மாவிடம் கொடுத்து விடுவார். அந்த
பணத்தை எங்க அம்மா வாங்கும்போது அவர் முகத்தில் ஒரு சந்தோஷஒளி தோன்றி மறையும். இதை
நான் பலமுறை கவனித்துள்ளேன். அப்பொழுதுதான் நான் நினைத்தேன், நம்மாளும் ஏதாவது ஒரு
நல்ல செய்தியை நமது பள்ளியில் கற்றுக்கொண்டு அம்மாவிடம் சொல்ல வேண்டுமென்று முடிவு
செய்தேன்.
அதற்கு நமது பள்ளியின் நூலகமும், நமது பள்ளியின்
முதல்வரும் உதவி செய்தனர். இதனால் ஒவ்வொரு நாளும் ஒரு பயனுள்ள செய்தியோடு நான்
அம்மாவை சந்திப்பேன். அப்பா பணம் தரும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட நான் வந்து ஒரு
புதிய செய்தியை சொல்லும் போது அம்மாவின் முகத்தில் அதைவிட பிரகாசமாக ஒளிர்வதை
கவனித்தேன். இதுதான் எனக்கு பெரும் மகிழ்வை தந்தது. இது ஒவ்வொரு நாளும் தொடர தொடர
என்னை அறியாமல் நான் வகுப்பிலும் நன்றாக படிக்க ஆரம்பித்து விட்டேன். ஆசிரியர்
முகத்திலும் அதே மகிழ்ச்சியை நான் கண்டேன். இதனால் இருபதாவது ரேங்கில் இருந்த நான்
முதலாவது ரேங்கைப் பிடித்து விட்டேன்.
அதுமட்டுமல்ல
நேரத்தை சரியாக திட்டமிட்டு யோக வகுப்பிற்கும் சென்று வந்தேன் எனது பெற்றோரும் உறவினர்களும்
எனக்குத் துணையாக இருந்தார்கள் இதனால்தான் உங்கள் முன்னாள் நான் முதல் மாணவியாக
நிற்கிறேன்! என்று சொன்ன போது மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் எழுந்து நின்று
கரவொலி எழுப்பினார்கள். கரவொலி அடங்க வெகு நேரமானது.
பள்ளியின்
முதல்வர் வந்து நந்தினியைப் பாராட்டி மேடையில் அமர வைத்தார். அவளது
பெற்றோர்களையும் அழைத்து மரியாதை செய்தார்.
என்ன மாணவர்களே!
நீங்களும் நமது நந்தினியைப் போல வாழ்வை உணர்ந்து படிப்பீர்களா?! என்று பள்ளியின்
முதல்வர் மாணவர்களை நோக்கி கேட்டார் “படிப்போம் சார்!” என்று மாணவர்கள் ஒரே
குரலில் உற்சாகமாக சொன்னார்கள்!

Comments
Post a Comment